குப்பை கிடங்கில் தீப்பிடித்தது: புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி


குப்பை கிடங்கில் தீப்பிடித்தது: புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் 15-வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் கொட்டப்படும் குப்பைகள் டிராக்டர் மூலம் சேகரிக்கப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் இரவு நேரங்களில் அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. இதில் ஏற்படும் கரும்புகை காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. புகை மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துகள் ஏற்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு இந்த குப்பை கிடங்கில் தீப்பிடித்தது. இந்த தீ காற்றின் வேகம் காரணமாக மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரும்புகை சூழ்ந்தது. புகை மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மோட்டார் சைக்கிள்கள், கார், பஸ் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் திணறினர்.

மேலும் மூச்சுத்தினறல் ஏற்பட்டதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மேலும் குப்பை கிடங்குகளில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கிடங்குகளில் அடிக்கடி தீப்பிடிப்பதால், அதில் ஏற்படும் கரும்புகை மூட்டத்தால், அருகில் உள்ள குடியிருப்பு வசிப்பவர்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறினர்.

எனவே இந்த குப்பை கிடங்கை குடியிருப்பு பகுதிகளை விட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story