வங்கியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 5 பேர் கைது


வங்கியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பூபேஷ்குப்தா (வயது 36). இவருக்கு அவரது நிலத்தில் கிணறு வெட்ட பணம் தேவைப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த கனகவல்லி என்பவர் திருவண்ணாமலை கார்கானா தெருவை சேர்ந்த சுமதி மற்றும் அரடாப்பட்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி ஆகியோரை பூபேஷ்குப்தா வீட்டிற்கு அழைத்து வந்தார்.

அப்போது அவர்கள் உங்களுக்கு கிணறு வெட்ட தேவையான பணத்தை நிலத்தின் பேரில் வங்கியில் கடன் பெற்று தருவதாகவும், ரூ.5 லட்சம் கடன் பெற்றால் ரூ.1 லட்சம் மானியம் கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அதன்பிறகு சுமதி போன் செய்து கடன் ஏற்பாடு செய்து விட்டதாகவும், உங்களிடம் உள்ள ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் நகல்களை எடுத்து கொண்டு திருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள கங்கையம்மன் கோவில் அருகே வருமாறு அழைத்து உள்ளார். அதை நம்பி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி பூபேஷ்குப்தா, அவரது அத்தை மகன் ஜெயவேல் என்பவருடன் சென்று உள்ளார். அங்கு சுமதி, கிருஷ்ணவேணி மற்றும் சுமதியின் கணவர் பழனிசாமி ஆகியோர் காரில் இருந்து உள்ளனர்.

அப்போது சுமதி ரூ.1 லட்சம் மானியம் பெற வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். முதற்கட்டமாக பூபேஷ்குப்தா ரூ.12 ஆயிரத்து 500 சுமதியிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கி கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பின்னர் ஒரு மாதம் கழித்து மேல்பாலானந்தல் கிராமத்தில் உள்ள கனகவல்லி வீட்டில் கடன் சம்பந்தமான கூட்டம் நடைபெறுவதாக பூஷ்ே-குப்தாவை அழைத்து உள்ளனர். அப்போது அவர், 2-ம் தவணையாக ரூ.12 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். அந்த சமயத்தில் அவர் உள்பட சுமார் 60 பேர் வங்கி கடனுக்காக பணம் கட்டி உள்ளனர். இதன் மூலம் கிடைத்த ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தை எடுத்து கொண்டு அவர்கள் சென்றனர்.

இதேபோல் மங்கலம் கிராமத்தில் மணிமேகலை என்பவர் வீட்டில் நடைபெற்ற கடன் சம்பந்தமான கூட்டத்திலும் அவர்கள் பணம் வசூல் செய்து உள்ளனர். ஆனால் அவர்கள் பணம் வாங்கியவர்களுக்கு கடன் வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளது பணம் கட்டியவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பூபேஷ்குப்தா மற்றும் சிலர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சென்னையை சேர்ந்த பத்மினி, அனுராதா, திருவண்ணாமலை கார்கானா தெருவை சேர்ந்த சுமதி ஆகியோர் தலைமையில் ஏஜெண்டாக கிருஷ்ணவேணி, கனகவள்ளி, மணிமேகலை மற்றும் சுமதியின் கணவர் பழனிசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் பல கிராமங்களுக்கு சென்று வங்கியில் கடன் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் இவர்கள் ரூ.31 லட்சத்து 65 ஆயிரம் மோசடி செய்து உள்ளது தெரியவந்தது. இதையடுத்து சுமதி, அவரது கணவர் பழனிசாமி, கிருஷ்ணவேணி, மணிமேகலை, கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சென்னையை சேர்ந்த அனுராதா, பத்மினி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story