பாளையங்கோட்டையில் காவலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
பாளையங்கோட்டையில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள பக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் கண்ணன் (வயது 54). இவருடைய மனைவி மாரியம்மாள் (48). இவர்களுடைய மகள் பார்வதி (18). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-வது ஆண்டு படித்து வருகிறார்.
பெருமாள் கண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் எதிரே உள்ள சுப்பிரமணியபுரம் தெருவில் குடியேறினார். இங்கு அவர் சமாதானபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பெருமாள் கண்ணன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
வ.உ.சி. மைதானத்துக்கு எதிரே உள்ள ஒரு தெரு வழியாக சென்றபோது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இதை கண்டித்து அவருடைய உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது அவருடைய குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி, அவருடைய மகள் பார்வதிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உடலை வாங்க உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் நேற்று போலீஸ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், பெருமாள் கண்ணன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட அவரது உடலை, அவருடைய உறவினர்கள் பெற்றுச் சென்றனர். பின்னர் உடல் பக்கப்பட்டி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது. பக்கப்பட்டி கிராமம் தூத்துக்குடி -நெல்லை 4 வழிச்சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த பாதையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பயணம் செய்ததால், அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கப்பட்டியை சேர்ந்த முத்துசாமி மற்றும் அவருடைய பேரன் சுடலைமணி (18) ஆகிய இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த இரட்டைக்கொலை நடந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு 2 பிரிவினருக்கு இடையே ஒருவரையொருவர் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வந்துள்ளனர். மேலும் கொலையாளிகளுக்கு பெருமாள் கண்ணன் அடைக்கலம் கொடுத்ததாகவும் கருதினர். இதையொட்டி கொலை நடந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக பக்கப்பட்டியை சேர்ந்த சிலரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த ஊரை சேர்ந்த பிரமுத்து, கிச்சான் மற்றும் ராமையா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெருமாள் கண்ணன் குடும்பத்துக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 நிவாரண நிதி வழங்க நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார். இதையொட்டி பாளையங்கோட்டை தாசில்தார் கனகராஜ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று அவருடைய குடும்பத்தினரிடம் நிவாரண நிதிக்கான காசோலை வழங்கினர். அப்போது பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் கோடிலிங்கம், மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நாகசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story