கூடங்குளம் அருகே மீனவர்கள் மோதல்: கடலில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரம்


கூடங்குளம் அருகே மீனவர்கள் மோதல்: கடலில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 July 2019 10:30 PM GMT (Updated: 6 July 2019 7:24 PM GMT)

கூடங்குளம் அருகே நடுக்கடலில் நடந்த மோதலில் நாட்டுப்படகு மீது விசைப்படகை மோதியதில், கடலில் விழுந்து மாயமான மீனவரை கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராதாபுரம், 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்துவிட்டு நேற்று முன்தினம் அதிகாலையில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சில மீனவர்களின் வலைகள் கடலில் தவறி விழுந்துள்ளது. இதனை தேடி 3 நாட்டுப்படகுகளில் கூத்தங்குழியை சேர்ந்த மீனவர்கள் டிலைட் (வயது 50), வினோ (35), சகாயம் (47), அஜித், டைசன் (25), சுரேஷ் ஆகியோர் கடலுக்கு சென்றனர். சுமார் 6 நாட்டிக்கல் தூரத்தில் கூத்தங்குழி மீனவர்கள் கடலுக்குள் வலையை தேடி கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த குமரி மாவட்டம் சின்னமுட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்களுக்கும், கூத்தங்குழி பகுதி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதால் விசைப்படகை இயக்கி வந்த சின்னமுட்ட பகுதி மீனவர்கள், டிலைட் இயக்கிக் கொண்டிருந்த நாட்டுப்படகு மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி டிலைட் கடலுக்குள் விழுந்தார். மாயமான அவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. மேலும் நடந்த கோஷ்டி மோதலில் கூத்தங்குழியை சேர்ந்த மீனவர்கள் வினோ உள்ளிட்ட 5 பேரும் காயம் அடைந்தனர்.

நடுக்கடலில் விழுந்து மாயமான மீனவர் டிலைட்டை தேடும் பணியில் நேற்று 2-வது நாளாக கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இச்சம்பவம் பற்றி அறிந்ததும் இன்பதுரை எம்.எல்.ஏ. நேற்று காலை கூத்தங்குழி கிராமத்துக்கு வந்தார். அங்குள்ள பங்குத்தந்தை ராஜன் இல்லத்தில் மீனவ மக்களை சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மீனவர் டிலைட் வீட்டுக்கு சென்று, அவருடைய தாயார், மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது இன்பதுரை எம்.எல்.ஏ. கூறுகையில், “மாயமான டிலைட்டை தேடி கண்டுபிடிக்குமாறு கடலோர பாதுகாப்பு படையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசிடம் வலியுறுத்தி உள்ளேன். டிலைட்டை தேடி கண்டுபிடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து உதவிகளையும் அரசு மூலம் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்” என்றார்.

மேலும் நெல்லையில் முகாமிட்டுள்ள சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளியை, இன்பதுரை எம்.எல்.ஏ. சந்தித்தார். மேற்கண்ட சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, விசைப்படகுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

Next Story