“பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்துவோம்” எடப்பாடி பழனிசாமி பேட்டி
“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்துவோம்” என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடி,
நெல்லை மாவட்டம் தென்காசியில் நடந்த அ.ம.மு.க. வினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று மாலை வந்தார்.
அவரை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது தாய் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி தென்காசியில் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மீண்டும் அ.தி.மு.க.வை வலுப்படுத்தி அடுத்து வரும் தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரான நானும் கோரிக்கை விடுத்து இருந்தோம். அதன்படி எங்கள் அழைப்பை ஏற்று விலகி சென்றவர்கள் படிப்படியாக அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டு வருகிறார்கள்.
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது கூட, தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை.
சேலம் இரும்பு உருக்காலை பிரச்சினை ஒரு பொது பிரச்சினையாகும். அங்கு பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். அந்த நிறுவனம் தனியார் இடத்திலே ஒப்படைக்க கூடாது என்ற அடிப்படையில் மற்ற மாநிலத்தில் ஒரு பிரச்சினை என வரும்போது எப்படி ஒன்றிணைந்து செயல்பட்டு அந்த பிரச்சினையை தீர்க்கிறார்களோ அதன் அடிப்படையில் எந்தவித மனமாச்சியமும் இல்லாமல் ஒன்றாக அனைவரும் இணைந்து குரல் கொடுத்து தனியாரிடம் தாரை வார்ப்பதை தடுப்பதற்காக ஒன்றாக குரல் கொடுத்துள்ளோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்தால் மக்களுக்கு சவுகரியமாக இருக்கும். இதனை நாங்கள் வலியுறுத்துவோம். காவேரி-கோதாவரி ஆறுகள் இணைப்புக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே மத்திய அரசு விரிவாக திட்ட அறிக்கை தயார் செய்து கொண்டு இருக்கிறது. அறிக்கை தயார் செய்த பின்னர் எவ்வளவு நிதி தேவைப்படும் என கணக்கிட்ட பிறகு மத்திய அரசு முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை-தூத்துக்குடி ஆவின் தலைவர் சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story