அமிர்தி பூங்காவை தரம் உயர்த்தி மேம்படுத்த அதிகாரிகள் குழு ஆய்வு
அமிர்தி பூங்காவை தரம் உயர்த்தி மேம்படுத்த அதிகாரிகள் குழு நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அடுக்கம்பாறை,
வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. இங்கு மான், மயில், வெள்ளை மயில், கூழைக்கிடா, நரி, முள்ளம்பன்றி, முதலை, குரங்குகள், பாம்பு வகைகள், காதல் பறவைகள், நட்சத்திர ஆமை, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளது. ஜவ்வாது மலைத் தொடரில் அமைந்துள்ள இந்த பூங்காவை ஒட்டி கொட்டாறு நீர்வீழ்ச்சி செல்கிறது. மழை காலங்களில் நீர்வீழ்ச்சியில் வரும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், அதில் குளிக்கவும் செய்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்த பூங்கா பார்வைக்காக திறந்துவைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் 10 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் எப்போதும் நிறைந்து காணப்படும்.
பொழுதுபோக்கு இடமாக மட்டும் இல்லாமல், பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ள இந்த பூங்காவை தரம் உயர்த்தி மேம்படுத்த வனத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் கூடுதலாக வெளிமான், சாம்பார் மான், பாம்பு வகைகள், கிளி வகைகள், நீர் பறவைகள் மற்றும் நீரில் வாழும் உயிரினங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்ட நடவடிக்கையாக பூங்காவை விரிவுபடுத்த திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் பூங்காவை எவ்வாறு வடிவமைப்பது என திட்டமிடுவதற்காக, கோவையை சேர்ந்த வனவிலங்கு விஞ்ஞானி டேனியல், வேலூர் மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா, வண்டலூர் பூங்காவின் வனவிலங்கு மருத்துவர் கலைஞன், சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் முகிலன், அமிர்தி வனச்சரக அலுவலர் சரவணன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று அமிர்தி பூங்காவை திடீரென ஆய்வு செய்தனர். பின்னர் பூங்காவில் வனவிலங்குகளை வைத்து பாதுகாப்பதற்கு தேவையான இடம் உள்ளதா?, இதன்மூலம் மக்கள் பயன்பெறுவார்களா?, விலங்குகள் பாதுகாப்பாக இருக்குமா? என்பன குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர் வனவிலங்கு விஞ்ஞானி டேனியல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
இந்தியாவில் மொத்தம் 180 வனவிலங்கு பூங்கா உள்ளது. முந்தைய காலத்தில் அதிகமாக இருந்த பூங்காவின் எண்ணிக்கை, பராமரிக்க முடியாததால் பூங்கா எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவின் வடிவமைப்பை பார்த்து நேபாளம், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பூங்கா வடிவமைக்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இந்தியாவில் உள்ளது போலவே, பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை தரம் உயர்த்தி, விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை, கொல்லிமலை, பச்சைமலை, கல்வராயன்மலை, சேர்வராயன் மலை, அழகர்மலை (சிறுமலை) ஆகிய 7 மலைகளில் வாழும் பறவைகள், மாமிசப்பச்சைகள் மற்றும் பல்லுயிர் சார்ந்த விலங்களை அமிர்தியில் கொண்டுவர ஆலோசனை நடந்துவருகிறது. அந்த விலங்குகள் இங்கு வாழ்வதற்கு ஏற்றவாறு வாழ்விடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க நாமே பல்லுயிர் என்ற பெயரில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தி பற்றி அறிய ரெயில்நிலையம், பஸ்நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்படும். அமிர்தி வரும் சுற்றுலா பயணிகள் மலைக் கிராமங்களை சுற்றிப்பார்க்க சிறப்பு பஸ் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story