குமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வசந்தகுமார் எம்.பி. சுற்றுப்பயணம்


குமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வசந்தகுமார் எம்.பி. சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 6 July 2019 11:00 PM GMT (Updated: 6 July 2019 8:01 PM GMT)

குமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று வசந்தகுமார் எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் நேற்று நாகர்கோவிலில் பல்வேறு இடங்களுக்கு திறந்த ஜீப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர் கேசவதிருப்பாபுரம், பள்ளிவிளை, தெலுங்கு செட்டித்தெரு, வாத்தியார்விளை, கிருஷ்ணன்கோவில், அறுகுவிளை, கலுங்கடி, வடசேரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

முன்னதாக பார்வதிபுரத்தில் சுற்றுப்பயணத்தை சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அப்போது வசந்தகுமார் எம்.பி. பேசுகையில் கூறியதாவது:-

புற்றுநோய் சிகிச்சை மையம்

குமரி மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்பி உள்ளேன். அரசு ஆஸ்பத்திரிகளை அனைத்து வசதிகளும் கொண்ட ஹைடெக் ஆஸ்பத்திரிகளாக மாற்ற வேண்டும் என்றும் கருத்தை பதிவு செய்துள்ளேன்.

குமரி மாவட்ட மக்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த சிரமத்தை தவிர்க்கும் விதமாக குமரி மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் மதுரை வரை வரும் ரெயில்களை குமரி மாவட்டம் வரை இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். எனது முதல் மாத சம்பளத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டியலிட்டு வழங்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களுக்கு நன்றி

சுற்றுப்பயணத்தில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ், தி.மு.க. நகர செயலாளர் மகேஷ் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து மாலையில் மீனாட்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கிய வசந்தகுமார் எம்.பி. ஊட்டுவாழ்மடம், கரியமாணிக்கபுரம், இடலாக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Next Story