கோஷ்டி மோதல்: கடலில் விழுந்தவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்


கோஷ்டி மோதல்: கடலில் விழுந்தவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் மீனவர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவத்தில் கடலில் விழுந்தவரை 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. இதற்கிடையே சின்னமுட்டத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி,

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே கூத்தங்குழி கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் டிலைட் (வயது 50), வினோ (35), சகாயம் (47) உள்பட சிலர் நேற்று முன்தினம் கடலில் விழுந்த தங்களது வலையை நாட்டுப்படகில் சென்று தேடிக்கொண்டிருந்தனர்.

அப்போது குமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் மீனவர்கள் அப்பகுதிக்கு சென்றனர். அவர்களுக்கும், கூத்தங்குழி மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தோன்றி தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சின்னமுட்டம் பகுதி மீனவர்களின் விசைப்படகு, டிலைட் இயக்கிக் கொண்டிருந்த நாட்டுப்படகு மீது மோதியதாக தெரிகிறது. இதில் டிலைட் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதைத்தொடர்ந்து இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில், நாட்டுப்படகில் வந்த 5 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் கூடங்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

இதற்கிடையே கடலில் விழுந்து மாயமான மீனவர் டிலைட்டை, கூடங்குளம் கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. ஆனால், அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டுள்ள சுமார் 350 விசைப்படகுகள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. அந்த விசைப்படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் சின்னமுட்டம் மீன்மார்க்கெட் நேற்று வெறிச்சோடியது. 

Next Story