விருத்தாசலத்தில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு: குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது


விருத்தாசலத்தில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு: குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2019 3:45 AM IST (Updated: 7 July 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 கொள்ளையர்களை போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கடலூர், 

விருத்தாசலம் பி.என்.ஆர்.நகரை சேர்ந்தவர் சிற்றரசு மனைவி விருத்தாம்பாள்(வயது 42). சம்பவத்தன்று இவர் விருத்தாசலம் சந்திப்பு ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், விருத்தாம்பாளின் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இது பற்றி விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் தீர்த்தமண்டப தெருவைச்சேர்ந்த சுரேஷ்(42), விருத்தாசலம் நாச்சியார்பேட்டையைச்சேர்ந்த சங்கர்(28) ஆகிய 2 பேரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

இவர்கள் மீது ஏற்கனவே விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையங்களில் 4 வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதனால் இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவுப்படி சுரேசையும், சங்கரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது கைது செய்தார். இதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலம் சங்கர், சுரேசுக்கு போலீசார் வழங்கினர்.

Next Story