விருத்தாசலம் அருகே தனியார் பள்ளி சூறை பதற்றம்; போலீஸ் குவிப்பு


விருத்தாசலம் அருகே தனியார் பள்ளி சூறை பதற்றம்; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 7 July 2019 4:00 AM IST (Updated: 7 July 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இதனால் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 1700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். விருத்தாசலத்தை சேர்ந்த டாக்டர் இளவரசன், பள்ளியின் அறக்கட்டளை தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 15 பேர் கொண்ட கும்பல், அத்துமீறி பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து அலுவலகத்தின் பூட்டை உடைத்து, பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது. மேலும் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்ததும் பள்ளியின் அறக்கட்டளை தலைவர் டாக்டர் இளவரசனின் ஆதரவாளர்கள் திரண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். இவர்களை பார்த்ததும் அந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இந்த நிலையில் டாக்டர் இளவரசனின் ஆதரவாளர்கள் நேற்று காலையில் பள்ளிக்கூடத்தில் இருந்தனர். அப்போது, அங்கு ஒரு கும்பல் வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்படும் சூழல் உருவானது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் டாக்டர் இளவரசனின் ஆதரவாளர்களும், அந்த கும்பலை சேர்ந்தவர்களும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். இருப்பினும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் பள்ளிக்கூடம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story