வால்பாறையில் சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது


வால்பாறையில் சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது
x
தினத்தந்தி 7 July 2019 4:15 AM IST (Updated: 7 July 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பட்டப்பகலில் சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றது.

வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள மலநாடு எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது கன்றுக்குட்டி அங்குள்ள சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய இடத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.

மாலை 4 மணிக்கு வனப்பகுதிக்குள்ளிருந்து வந்த சிறுத்தைப்புலி திடீரென கன்றுக்குட்டி மீது பாய்ந்தது. கன்றுக்குட்டி தப்பியோட முயற்சித்தது. ஆனால் சிறுத்தைப்புலி விடாமல் அதனை விரட்டிச்சென்று அடித்துக் கொன்றது. பின்னர் கன்றுக் குட்டியின் உடலை தின்பதற்காக வனப்பகுதிக்குள் இழுத்துச் செல்ல முயன்றது. அதற்குள் அந்த பகுதியில் இருந்தவர்கள் அதனை பார்த்து கூச்சலிட்டனர். உடனே சிறுத்தைப்புலி கன்றுகுட்டியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

கண்காணிப்பு

இது குறித்து மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். எஸ்டேட் பகுதிகள் சோலையார்அணையின் நீர்பிடிப்பு பகுதியாக இருப்பதாலும், அருகில் வனப்பகுதிகள் உள்ளதாலும் அடிக்கடி குரங்குமுடி, மலநாடு, சிவாகாபி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் வெளிமாநில தொழிலாளியின் வீட்டுக்குள் சிறுத்தைப்புலி புகுந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிவாகாபி எஸ்டேட் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழிகளை கவ்விச் சென்றது.

எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் கண்காணிப்பு பணியை அதிகரிக்க வேண்டும் என்று எஸ்டேட் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Next Story