பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள், முத்திரையுடன் பீடி பண்டல்கள் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது


பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள், முத்திரையுடன் பீடி பண்டல்கள் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 July 2019 11:30 PM GMT (Updated: 6 July 2019 9:02 PM GMT)

திருப்பூரில், பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள், முத்திரையுடன் பீடி பண்டல்களை தயாரித்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு பிரபல பீடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பீடிகள் முகவர்கள் மூலமாக திருப்பூர், ஈரோடு பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பீடிகள் கடந்த சில மாதங்களாக திருப்பூர் பகுதியில் குறைந்த அளவுக்கு விற்பனையானது. ஆனால் அந்த நிறுவனத்தின் பீடிகள் கடைகளில் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பீடி நிறுவனத்தின் முகவரான ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த அப்துல் ரசாக்(வயது 55) இதுகுறித்து கண்காணித்து வந்தார். அப்போது திருநெல்வேலியில் இருந்து இதே நிறுவனத்தின் பெயரில் போலியாக லேபிள் தயாரித்து பீடிகளை கொண்டு வந்து 2 பேர் திருப்பூர், ஈரோடு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்கள் கார் மூலமாக திருப்பூருக்கு நேற்று பீடிகளை விற்பனை செய்ய கொண்டு வருவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அப்துல் ரசாக் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தெற்கு உதவி கமி‌‌ஷனர் நவீன்குமார் மேற்பார்வையில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் போலீசார் திருப்பூர் பல்லடம் ரோடு கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.

காருக்குள் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள் ஒட்டப்பட்டு பீடி பண்டல்கள் மூடை, மூடையாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த காஜாமைதீன் (58), ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்த ஆறுமுகம்(49) என்பது தெரியவந்தது.

காஜாமைதீன் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக லேபிள், முத்திரையுடன் பீடி தயாரித்து பண்டல்களை திருப்பூர் கொண்டு வருவதும், ஆறுமுகம் தனது காரில் அவற்றை ஏற்றி கடை, கடையாக கொண்டு சென்று விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து 4 மூடைகளில் இருந்த 290 பீடி பண்டல்கள், 1 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காஜாமைதீன், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story