திருச்சி கோளரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு எந்திரனியல் பயிற்சி


திருச்சி கோளரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு எந்திரனியல் பயிற்சி
x
தினத்தந்தி 7 July 2019 4:15 AM IST (Updated: 7 July 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கோளரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு எந்திரனியல் பயிற்சி தொடங்கியது.

திருச்சி,

திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு எந்திரனியல் (ரோபோடிக்) பற்றிய 2 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. பயிற்சிக்கு கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன் தலைமை தாங்கி பேசுகையில், “திருச்சியில் கோளரங்கம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கோளரங்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது. உலக ரோபோடிக் ஒலிம்பியாட் எனும் அமைப்பில் சார்பில் எந்திரனியல் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவிலான போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெற உள்ளது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். தேசிய போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அளவிலான போட்டிக்கு செல்ல தகுதி பெறுவார்கள். மாணவ-மாணவிகள் எந்திரனியல் மீது அதிக ஆர்வம் கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.

சான்றிதழ்

எந்திரனியல் பயன்பாடு மற்றும் அதனை உருவாக்கும் முறை குறித்து சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் இயக்குனர் சுதர்சன் எடுத்துரைத்தார். இந்த பயிற்சியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 110 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பயிற்சி முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 

Next Story