அடுத்த தேர்தலில் நாராயணசாமியை மரியாதையுடன் வழி அனுப்புவோம் - எச்.ராஜா பேட்டி


அடுத்த தேர்தலில் நாராயணசாமியை மரியாதையுடன் வழி அனுப்புவோம் - எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 7 July 2019 4:15 AM IST (Updated: 7 July 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த தேர்தலில் நாராயணசாமியை மரியாதையுடன் வழி அனுப்பி வைப்போம் என்று எச்.ராஜா குற்றம் கூறினார்.

பாகூர்,

புதுவை மாநிலம் தவளக்குப்பம் அருகே உள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், தங்க.விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணவெளி சட்டப்பேரவை தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்ராஜா கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அப்போது கட்சியில் புதிதாக உறுப்பினராக சேருபவர்களிடம் பா.ஜ.க. கட்சியின் அதிகாரபூர்வ செல்போன் நம்பருக்கு ‘மிஸ்டுகால்’ கொடுக்கச் சொல்லி அதன் மூலம் அவர்கள் கட்சியின் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:–

நீட் தேர்வில் தமிழகத்துக்கு என்று தனியாக விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஆர்வத்தோடு எழுதுகின்றனர். அதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் ரூ.14 ஆயிரம் கட்டணத்தில் மருத்துவம் படிக்க முடிகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில்தான் போராட்டம் நடக்கிறது. ஏனென்றால் இங்குதான் மருத்துவ படிப்பை வியாபாரமாக செய்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியிலும், தி.மு.க.விலும் வாரிசு அரசியல் இருக்கின்றது. இந்த கட்சிகளில் சாதாரண ஒரு உறுப்பினர் தலைவராக வரமுடியாது. அண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வில் கருணாநிதி தலைமைப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து அந்த கட்சி ஒரு குடும்பத்தின் ஆளுமை, கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. ஆகவே தி.மு.க. தான் வாரிசு அரசியல் கட்சி, அ.தி.மு.க. வாரிசு அரசியல் கட்சி அல்ல. பா.ஜ.க.வில் வாரிசு அரசியல் என்பது வரவே முடியாது. அப்படி முடிவைக்கொண்ட கட்சி பா.ஜ.க.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பேசுபவர்கள் விஞ்ஞானிகளா? திருமாவளவன், வைகோ, சீமான், திருமுருகன் காந்தி இவர்களெல்லாம் விஞ்ஞானிகளா? ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்களை பீதியடைய செய்ய வேண்டும் என்ற தீய நோக்கத்தின் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு தி.மு.க.தான் காரணம். வைகோ ஒரு தேசத்துரோகி என நீதிமன்றமே முத்திரை குத்தியுள்ளது. அடுத்த தேர்தலில் மிகுந்த மரியாதையான முறையில் முதல்–அமைச்சர் நாராயணசாமியை வழியனுப்பி வைத்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story