ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் : நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவு
ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
புனே,
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்கள் அனைவர் மீதும் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்துள்ளன.
இந்த மோசடி அம்பலமாகுமுன் நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவருடைய நெருங்கிய உறவினரும் கூட்டாளியுமான சோக்சி, ஆன்டிகுவா பார்புடா நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதால் அங்கு உள்ளார். அவரையும் இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும் மோசடி செய்ததில், ரூ.7,200 கோடியை வட்டியுடன் வசூலிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி, மும்பை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
மும்பை கடன் வசூல் தீர்ப்பாயத்தின் கூடுதல் பொறுப்பை வகிக்கும் புனே கடன் வசூல் தீர்ப்பாயத்தின் தலைவர் தீபக் தக்கார் இந்த வழக்கை விசாரித்து நேற்று 2 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
முதல் உத்தரவில், நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 7,029 கோடியே 6 லட்சத்து 87 ஆயிரத்து 950-ஐ கூட்டாகவோ அல்லது அனைவரும் தனித்தனியாக சேர்ந்து மொத்தமாகவோ செலுத்த வேண்டும்; மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஆண்டுக்கு 14.30 சதவீதம் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று கடன் வசூல் தீர்ப்பாயத்தின் தலைவர் தீபக் தக்கார் கூறினார்.
மற்றொரு உத்தரவில், நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூபாய் 232 கோடியே 15 லட்சத்து 92 ஆயிரத்து 636-ஐ, 2018 ஜூலை மாதம் 27-ந் தேதி முதல் 16.20 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த தொகைகளை வசூலிப்பதற்கான நடவடிக்கையை கடன் வசூல் தீர்ப்பாயத்தின் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story