கண்டதேவி ஊருணியை தூர்வாரி சுத்தம் செய்த கிராம மக்கள்


கண்டதேவி ஊருணியை தூர்வாரி சுத்தம் செய்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 7 July 2019 4:15 AM IST (Updated: 7 July 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

அசுத்தமான நிலையில் காணப்பட்ட கண்டதேவி ஊருணியை கிராம மக்கள் தூர்வாரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி. ராமாயண காலத்தோடு தொடர்புடைய இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பின்புறத்தில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ஜடாயு தீர்த்தம் என்று அழைக்கப்படும் ஊருணி அமைந்துள்ளது. கடந்த காலங்களில் கடும் வறட்சி காலத்தில் கூட இந்த ஊருணியில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

இதனால் கண்டதேவி, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் இந்த ஊருணிக்கு தினந்தோறும் வந்து குளித்து விட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு போதிய அளவில் பராமரிப்பு இல்லாததால் இந்த ஊருணி முழுவதும் பாசி படர்ந்தும், நாணல் புதர்கள் மண்டியும், கரையோரம் கருவேல மரங்கள் முளைத்தும், ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசியது.

இதனால் இந்த பகுதி மக்கள் ஊருணியை பயன்படுத்த முடியாமல் வேதனையடைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து ஊருணியை தூர் வாரி சுத்தம் செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன் முதலில் தினத்தந்தி நாளிதழில் செய்தி பிரசுரமானது. இதையடுத்து இந்த ஊருணியை சுத்தம் செய்யும் பணியில் கிராம மக்களே இறங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஊருணி சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு தற்போது இந்த ஊருணி தூர்வாரப்பட்டு புத்துயிர் பெற்று காணப்படுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:- வரலாற்று சிறப்பு வாய்ந்த கண்டதேவி ஊருணி கடந்த காலங்களில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதனால் கிராமம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. நாளடைவில் இந்த ஊருணி பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்ட நிலையில் சில இடங்களில் கருவேல மரங்கள் முளைத்தும், நாணல் புதர்கள் மண்டியும் அசுத்தமான நிலையில் காணப்பட்டது. இதை தினத்தந்தி நாளிதழில் முதன் முதலில் இந்த ஊருணியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி பிரசுரமாகியது. இதையடுத்து எங்களது கிராம மக்கள் ஒத்துழைப்புடன் எங்களது பங்களிப்போடு இந்த ஊருணி தூர் வாரப்பட்டு சுத்தம் செய்யும் பணியை கடந்த சில மாதத்திற்கு முன்பு தொடங்கினோம். இதன் தொடக்கத்தில் துறையூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து உழவாரப்பணியினர் வந்து கலந்து கொண்டனர்.

இந்த ஊருணிக்கு ஆழ்குழாய் மூலம் தண்ணீர் நிரம்பும் பணி நடைபெற உள்ளது. மேலும் மழைக்காலங்களில் ஊருணிக்கு வரும் பல்வேறு வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் நீர்வரத்து முற்றிலும் தடைப்பட்டு விட்டது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் புகார் செய்து இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்க உள்ளோம். ஊருணியில் தண்ணீர் நிரம்பிய பின்னர் கிராம மக்கள் சார்பில் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் வாங்கி விட உள்ளோம்.

இனி வரும் காலங்களில் இந்த ஊருணியை பயன்படுத்தும் மக்கள் எவ்வித அசுத்தம் செய்யாமல் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதேபோல் நீர்நிலைகளாக உள்ள ஊருணிகள் முறையாக பயன்படுத்தாமல் அரசின் உதவியை நோக்கி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இனி வரும் காலங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நமது கிராமப்புறத்தில் உள்ள ஊருணிகளை நாம் தான் தூர்வாரி நீர் நிலைகளை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் நமது பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் குடிதண்ணீர் பற்றாக்குறையை தடுக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story