ராமேசுவரத்தில் இறால் பண்ணைக்கு கடல் நீரை கொண்டு செல்ல பயன்படுத்திய எந்திரம் சிறைபிடிப்பு; கிராம மக்கள் போராட்டம்


ராமேசுவரத்தில் இறால் பண்ணைக்கு கடல் நீரை கொண்டு செல்ல பயன்படுத்திய எந்திரம் சிறைபிடிப்பு; கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 July 2019 11:30 PM GMT (Updated: 6 July 2019 9:56 PM GMT)

ராமேசுவரத்தில் இறால் பண்ணைக்கு கடல் நீர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி. எந்திரத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அப்போது அனைத்து பண்ணைகளையும் மூடக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் அரியாங்குண்டு, பேக்கரும்பு, வடகாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் முறையாக அனுமதி பெறாத இறால் பண்ணைகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடகாடு பகுதியில் உள்ள ஒரு இறால் பண்ணைக்கு நேற்று கடலில் இருந்து தண்ணீர் கொண்டு வர ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையறிந்த வடகாடு, சம்பை, மற்றும் அரியாங்குண்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து ஜே.சி.பி. எந்திரத்தையும், அதன் டிரைவரையும் சிறைபிடித்தனர். மேலும் பண்ணைகளை மூடக்கோரி அங்கேயே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த ராமேசுவரம் தாசில்தார் அப்துல் ஜபார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் வனத்துறையினர், கடலோர போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர், கடல் வளம் மாசுபடுகிறது. பாசி எடுக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் உள்ள பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. இறால் பண்ணை கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்று கூறி அனைத்து இறால் பண்ணைகளையும் மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் நேரில் வந்து உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை போராட்டம் நீடித்தது. இந்நிலையில் இறால் பண்ணையை அகற்றவும், ஜே.சி.பி. டிரைவரை கைது செய்யவும் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story