விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழு திடீர் ஆய்வு


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழு திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 6 July 2019 10:45 PM GMT (Updated: 6 July 2019 10:07 PM GMT)

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மதுரை ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பரிந்துரை செய்தனர்.

விருதுநகர்,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சில மாதங்களுக்குமுன் மின்தடை காரணமாக 5 உள்நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மின் பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய டாக்டர் சோமசுந்தரம், வக்கீல் சுப்பாராஜ், செந்தில் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவினை அமைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

அதன்பேரில் இக்குழுவினர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் டாக்டர். பிரகலாதன், டாக்டர். அன்புவேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மின் பணியாளர் மட்டும் பணியில் இருப்பதும், மின் என்ஜினீயர் பணியிடம் இல்லாமல் இருப்பதும், ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி வசதிகள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு தளங்களில் நோயாளிகளை அழைத்து செல்ல தள்ளுவண்டிகள் இல்லாதது கண்டறியப்பட்டது. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தனர். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Next Story