வேளச்சேரியில் ஓட்டல் தொழிலாளி அடித்துக்கொலை நண்பர்கள் தப்பி ஓட்டம்
வேளச்சேரியில், ஓட்டல் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கார்த்திக். இவர், தள்ளுவண்டியில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவரிடம் அசாம் மாநிலத்தை சேர்ந்த நண்பர்களான ஜித்து(வயது 22), ஜாந்தோ(23), ரஞ்சித் (24) உள்பட 4 பேர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 4 பேரும் வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி 5–வது மெயின்ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தனர்.
நேற்று மதியம் 12 மணிக்கு வேலைக்கு வரவேண்டிய 4 பேரும் வராததால் கார்த்திக், செல்போனில் ரஞ்சித்தை தொடர்பு கொண்டார். அப்போது அவர், ‘‘நான் அவசரமாக ஊருக்கு செல்கிறேன்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து கார்த்திக், அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றார். அங்கு ஜித்து தலையில் அடிபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜித்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஜித்துவை இரும்பு கம்பியால் அடித்தும், தலையில் கல்லை கொண்டு தாக்கியும் கொன்று இருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் என்ன தகராறு? எதற்காக கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை.
ஜித்துவை கொலை செய்துவிட்டு, நண்பர்கள் 3 பேரும் சொந்த ஊருக்கு தப்பி ஓடிவிட்டதால் அவர்களை பிடித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜித்துவின் நண்பர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.