சம்பள முன்பணம் தராததால் விரக்தி: ஓட்டல் ஊழியர் தீக்குளித்து தற்கொலை


சம்பள முன்பணம் தராததால் விரக்தி: ஓட்டல் ஊழியர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 July 2019 11:45 PM GMT (Updated: 6 July 2019 11:29 PM GMT)

சம்பள முன்பணம் தராத விரக்தியில், தான் வேலை பார்த்த பிரபல ஓட்டலின் தலைமை அலுவலகம் முன்பு ஊழியர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு பிரபலமான ஓட்டல் அஞ்சப்பர் சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு, தமிழகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள இந்த ஓட்டலின் கிளையில் தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த உதயசங்கர் (வயது 25) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திவ்யா என்பவருடன் திருமணம் நடந்தது.

உதயசங்கர் வேலை பார்த்த அதே ஓட்டலில் அவரது உறவினர் அஜித் என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அஜித் ஓட்டலில் உள்ள பணத்தை எடுத்துவிட்டு, ஊருக்கு சென்று விட்டதாகவும், இதையடுத்து அஜித் மீண்டும் பணிக்கு வர மாட்டார் என எண்ணி அவரது உறவினரான உதயசங்கரிடம் ஓட்டல் நிர்வாகம் ‘நீ தான் பணம் கொடுக்க வேண்டும்’ என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த உதயசங்கர் சில நாட்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பின்னர் உதயசங்கர் மீண்டும் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் மாலை கோடம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் தலைமையகத்துக்கு சென்று, தனது சம்பளத்தை முன்பணமாக தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

ஆனால் ஓட்டல் நிர்வாகம் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த உதயசங்கர், தலைமை அலுவலகத்தின் வாசலில், திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை கண்ட பொதுமக்கள், அவர் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

பலத்த தீக்காயம் அடைந்த உதயசங்கரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உதயகுமார் நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story