திருவண்ணாமலையில் தண்டவாளத்தில் கால்கள் துண்டான நிலையில் போலீஸ்காரர் பிணம்


திருவண்ணாமலையில் தண்டவாளத்தில் கால்கள் துண்டான நிலையில் போலீஸ்காரர் பிணம்
x
தினத்தந்தி 8 July 2019 4:45 AM IST (Updated: 7 July 2019 10:08 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ரெயில் தண்டவாளத்தில் கால்கள் துண்டான நிலையில் போலீஸ்காரர் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கோணலூர் பொலகுணம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டராமஜெயம் (வயது 30). இவர், சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு 13-வது அணியில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பாரதி. இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டராமஜெயம் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர், தனது நண்பர்களுடன் திருவண்ணாமலையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் ரெயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளத்தில் கால்கள் துண்டாகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

அதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மணிகண்டராமஜெயம் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் இறந்து கிடப்பது அவர் தான் என்று உறுதி செய்தனர்.

பின்னர் அவர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் பிணத்துடன் அமர்ந்து சாவில் மர்மம் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் காலை 6.30 மணி அளவில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் வந்தது. பின்னர் அவர்கள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் உடலை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து காலை 8.10 மணி அளவில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு மற்றும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story