சூளகிரி அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சூளகிரி அருகே நடுரோட்டில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
சூளகிரி,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று, நேற்று திருப்பூர் நோக்கி சென்றது. இந்த லாரியை நெல்லையை சேர்ந்த சார்லஸ் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார். வழியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது.
பின்னர் லாரி சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சார்லஸ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து காயம் அடைந்த டிரைவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் சாமல்பள்ளம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story