குடிநீர் குழாய் இணைப்பில் ‘வால்வு’ பொருத்த எதிர்ப்பு: பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி பாலக்கோட்டில் பரபரப்பு
பாலக்கோட்டில் குடிநீர் குழாயில் வால்வு பொருத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
பாலக்கோடு,
பாலக்கோடு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பேரூராட்சி பகுதிகளில் 16 வார்டுகளிலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் ‘வால்வு‘ பொருத்த வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்புகளில் வால்வு பொருத்தி வருகின்றனர். இதற்கு பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் நேற்று முன்தினம் 15-வது வார்டு கல்கூடல்பட்டி பகுதிக்கு குடிநீர் குழாய்களில் வால்வு பொருத்த சென்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காலிக்குடங்களுடன் மல்லாபுரம்- பாலக்கோடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து நேற்று பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் 6 மற்றும் 14-வது வார்டுகளில் குடிநீர் குழாய்களில் வால்வு பொருத்த சென்றனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போதுமான தண்ணீர் வினியோகம் செய்யுங்கள். அதன்பிறகு குடிநீர் குழாய் இணைப்புகளில் வால்வு பொருத்துங்கள் என்று கூறி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் வெங்கடேஷ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கலெக்டர் உத்தரவின் பேரில் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க வால்வு பொருத்தப்படுகிறது. சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story