கோயம்பேடு மார்க்கெட்டில் போலீசாருடன் தொழிலாளர்கள் வாக்குவாதம்; சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு


கோயம்பேடு மார்க்கெட்டில் போலீசாருடன்  தொழிலாளர்கள் வாக்குவாதம்; சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 8 July 2019 4:45 AM IST (Updated: 7 July 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு மார்க்கெட்டில் போலீசாருடன் தொழிலாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டார். மேலும் அரசு பஸ் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி, கூலி வேலை செய்து வருபவர் முருகானந்தம்(வயது 23). நேற்றுமுன்தினம் இரவு இவர், கோயம்பேடு மார்க்கெட் 7-ம் எண் கேட் அருகே அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ரோந்து வாகனத்தில் வந்த கோயம்பேடு போலீஸ் ஏட்டு சுரேஷ் என்பவர் “போலீஸ் வருவதுகூட தெரியாமல் அமர்ந்து கொண்டு செல்போனில் பேசுகிறாயா?” என கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஏட்டு சுரேஷ், கூலித்தொழிலாளி முருகானந்தத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும் அங்கிருந்த சக தொழிலாளர்கள் அங்கு ஒன்று திரண்டனர். இதனால் ஏட்டு சுரேஷ், கோயம்பேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ, தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் வாக்குவாதம் செய்த தொழிலாளர்கள், திடீரென சப்-இன்ஸ்பெக்டர் ராஜூவை சரமாரியாக தாக்கியதுடன், அவரது கையில் இருந்த வாக்கி-டாக்கியையும் பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜூவை சக போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஏட்டு தாக்கியதால் காயம் அடைந்த தொழிலாளி, முருகானந்தமும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தொழிலாளர்கள் சிலர், அந்த வழியாக சென்ற அரசு பஸ் ஒன்றின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, முருகானந்தத்தை தாக்கிய போலீஸ் ஏட்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கூலித் தொழிலாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கோயம்பேடு மார்க்கெட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story