தனியார் நிறுவனத்தில் ரூ.2½ லட்சம் பொருட்கள் திருடிய காவலாளி உள்பட 2 பேர் கைது
காவேரிப்பட்டணம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பொம்மசமுத்திரம். இங்கு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக பைரேஷ்கான் (வயது 43) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதே நிறுவனத்தில் கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுகுறியைச் சேர்ந்த குமார் (40), கருக்கன்சாவடியைச் சேர்ந்த குமார் (44) ஆகியோர் காவலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 5 டன் இரும்பு ஷீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது. இது தொடர்பாக மேலாளர் பைரேஷ்கான் காவேரிப் பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தினார். அதில் காவலாளிகள் 2 பேரும், கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த பழைய இரும்பு பொருட்கள் கடை உரிமையாளர் வசந்தகுமார் (30) என்பவருடன் சேர்ந்து இரும்பு ஷீட்டுகள் மற்றும் பொருட்களை சரக்கு வாகனத்தில் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து இரும்பு பொருட்களை திருடியதாக கருக்கன்சாவடியை சேர்ந்த காவலாளி குமார், பழைய இரும்பு கடைக்காரர் வசந்த குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றொரு காவலாளியான கல்லுகுறி குமாரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து திருடப்பட்ட இரும்பு ஷீட்டுகள் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story