குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது: சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்
குற்றாலத்தில் அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய இரண்டு நாட்கள் மட்டும் சாரல் மழை பெய்தது. அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து குற்றாலத்திற்கு வரத்தொடங்கினர். பின்னர் சாரல் மழை இல்லாமல் வெயில் அடித்தது. இதன் பிறகு சில நாட்களில் கேரளாவில் பலத்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து குற்றாலம் மலைப்பகுதியில் மழை பெய்தது. இதன் காரணமாகஅருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் மீண்டும் சாரல் மழை இல்லாமல் வெயில் அடிக்க தொடங்கியது. கடந்த 2 வாரமாக குற்றாலத்தில் வெயில் அடித்து வருகிறது. இடையிடையே சிறிது நேரம் மட்டும் சாரல் மழை தூறியது. அருவிகளில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் சுமாராக தண்ணீர் விழுந்தது. மற்ற கிளைகளில் குறைவாக தண்ணீர் விழுந்தது. வழக்கமாக விடுமுறை நாட்களில் குற்றாலத்தில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவியில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுந்தது. இங்கும் சுற்றுலாப்பயணிகள் வரிசையில் நின்றுதான் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story