ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை: பட்டா மாறுதல் பெற நாளை சிறப்பு முகாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை: பட்டா மாறுதல் பெற நாளை சிறப்பு முகாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 7 July 2019 10:45 PM GMT (Updated: 7 July 2019 6:34 PM GMT)

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா மாறுதல் பெற நாளை சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல், 

பிரதமர் நரேந்திர மோடியின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் பயன் பெறும் வகையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிதிட்டம் கடந்த 1.2.2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சிறு, குறு விவசாயிகளுக்கு (5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள்) ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதிஉதவி வழங்கும் இத்திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 69,333 சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து உள்ளனர்.

இதை தொடர்ந்து, தற்போது நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது சுமார் 13 ஆயிரத்து 361 நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்து உள்ளார்கள். இதுவரை, மாவட்டத்தில் சுமார் 82,694 விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர்.

எனவே உயர் வருவாய் பிரிவினர், ஆடிட்டர், மருத்துவர், பொறியாளர், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர், அரசு ஊழியர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உடையவர் உள்ளிட்ட விலக்கு அளிக்கப்பட்ட நபர்களை தவிர தகுதி உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் சம்பந்தப்பட்ட ஆவணங்களான, தங்கள் பெயரிலான பட்டா, சிட்டா, ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை (ஸ்மார்ட்கார்டு), பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ள செல்போன் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பம் அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து பட்டா மாறுதல் பெற்று, இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.

இதற்கென நாளை (செவ்வாய்க்கிழமை) பட்டா மாறுதல் பெற சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story