கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது எடியூரப்பா பரபரப்பு பேட்டி
கர்நாடகத்தில் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா துமகூருவில் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த அரசியல் குழப்பத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாங்கள் ஒன்றும் சன்னியாசிகள் அல்ல. ராஜினாமா செய்யும் பணிகள் முடிவடைந்தவுடன் அதன் மீது சபாநாயகர் முடிவு எடுப்பார். அதைதொடர்ந்து எங்கள் கட்சியின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவோம்.
எங்களது கட்சி, தேசிய கட்சி. கட்சியின் தேசிய தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு உரிய முடிவு எடுப்போம். இந்த கூட்டணி அரசு கவிழுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த அரசு நீடிக்குமா? என்பது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாத நிலையில் நான் உள்ளேன். அனைத்து விஷயங்களும் சபாநாயகரின் முடிவை சார்ந்துள்ளது.
வருகிற 12-ந் தேதி கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி வெளிநாட்டில் உள்ளார் (குமாரசாமி நேற்று இரவு பெங்களூரு வந்துவிட்டார்). எனது கருத்துப்படி, கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அனைத்து பத்திரிகைகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளன. இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற தகவல் உள்ளது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story