விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கை கோள் தொலைதொடர்பு கருவி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கை கோள் தொலைதொடர்பு கருவி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 7 July 2019 10:30 PM GMT (Updated: 7 July 2019 6:54 PM GMT)

தூத்துக்குடி அருகே விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கைகோள் தொலைதொடர்பு கருவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கைகோள் தொலைதொடர்பு கருவி வழங்கும் நிகழ்ச்சி தருவைகுளத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, 22 விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கை கோள் தொலை தொடர்பு கருவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் மீனவர்களுக்கு அதிக அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

தருவைகுளத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டது. விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் போது, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இயற்கை சீற்றம் தொடர்பான தகவல்களை மீனவர்களுக்கு தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறை மூலம் தெரிவித்து வருகிறது.

இந்த தகவல்கள் மீனவர்கள் அதிக தொலைவில் இருந்தாலும், அவர்களை சென்றடைய வசதியாகவும், அவசர காலங்களில் உதவி கோர வசதியாக செயற்கைகோள் தொலை தொடர்பு கருவி வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் 100 சதவீதம் மானியத்தில் இந்த கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி தருவைகுளத்தில் உள்ள 110 விசைப்படகுகளை 11 குழுக்களாக பிரித்து ஒரு குழுவுக்கு 2 கருவிகள் வீதம் மொத்தம் 22 செயற்கை கோள் தொலை தொடர்பு கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. 11 குழுவுக்கும் தலா ஒரு சர்வதேச நடுத்தர அதிர்வெண் மூலம் செயல்படும் அச்சு எந்திரமும் வழங்கப்படுகிறது.

தருவைகுளத்தில் மீன்கள் பாதுகாக்கும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஐஸ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story