விளாத்திகுளம் தாலுகாவில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


விளாத்திகுளம் தாலுகாவில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 July 2019 9:30 PM GMT (Updated: 7 July 2019 6:54 PM GMT)

விளாத்திகுளம் தாலுகாவில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளம் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

விளாத்திகுளம், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வாதலக்கரை ஊராட்சியில் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ள “ஊருக்கு நூறு கை, ஊருக்காக ஒரு நாள் ஊர் காக்க ஒரு நாள்” திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சின்னப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி திட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுகுளங்கள், ஊரணிகள், குட்டைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்களின் கோரிக்கையின்படி பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரி புனரமைக்க ‘ஊருக்கு நூறு கை‘ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், பொதுமக்கள் “ஊருக்காக ஒரு நாள் ஊர் காக்க ஒரு நாள்“ என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் விளாத்திகுளம் வட்டம் வாதலக்கரை கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், ஊரக பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊரணிகள், குட்டை, சிறுகுளங்கள் தூர்வாரவும் கிராம பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மரம் நடுதல் உள்ளிட்டவைகளும், கழிவுநீர் சுத்திகரித்தல், திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் தடை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பொதுமக்கள் பங்களிப்புடன் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் அரசு உதவியுடன் பொதுமக்கள் பங்களிப்புடன் பல நல்ல பணிகள் மேற்கொள்ளப்படும். பராமரிக்கப்படும் குளங்களை குப்பைகளை போடாமல் பொதுமக்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளிலும் மழைநீர் சேகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மண் அள்ளும் பொக்லைன் எந்திரங்கள் மற்றும் நிர்வாக உதவிகள் செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள டிராக்டர் உள்ளிட்டவைகளை இத்திட்டத்திற்கு பயன்படுத்தி உங்களது கிராமங்களின் குடிநீர் ஆதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

வாதலக்கரை கிராம மக்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் குளம் தூர்வாருதல், வரத்து கால்வாய் மற்றும் கூடுதல் நீர் வழிந்தோடும் கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் முடிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த திட்டத்தினை பயன்படுத்தி குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதுடன் நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கும் உதவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் உமாசங்கர், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவநீதகிருஷ்ணன், சிவபாலன், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் ரெஜினால்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story