திருமண இணையதளத்தில் பழக்கம்: பெண் என்ஜினீயரை ஏமாற்றி ரூ.24.30 லட்சம் மோசடி வாலிபருக்கு வலைவீச்சு
திருமண இணையதளத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் பெண் என்ஜினீயரை ஏமாற்றி ரூ.24.30 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூரு,
உத்தர கன்னடாவை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது சுய விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். இந்த விவரங்களை பார்த்து அவரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அந்தநபர், ‘தனது பெயர் விஷால் (28). பெங்களூரு ஒயிட்பீல்டுவில் உள்ள ஆன்-லைன் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறேன். எனக்கும் உத்தர கன்னடா தான். எனக்கு உங்களை மிகவும் பிடித்துள்ளது. இதனால் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளலாம்‘ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேச தொடங்கினர். இந்த வேளையில் தனக்கு பணப்பிரச்சினை உள்ளது என கூறி இளம்பெண்ணிடம் அவர் பணம் வாங்கியுள்ளார். அதாவது, தொழில் தொடங்குவதாகவும், வருங்காலத்தில் வசிக்க வீடு வாங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு காரணங்களை கூறி பெண் என்ஜினீயரிடம் இருந்து அவர் ரூ.24.30 லட்சம் வாங்கியுள்ளார்.
பின்னர் அவர், பெண் என்ஜினீயரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெண் என்ஜினீயர் விஷால் குறித்து விசாரித்தார். அப்போது அவர் ஏற்கனவே திருமணம் செய்து இருப்பதும், அவர் வேலை எதுவும் செய்யாததும் தெரிந்தது. மேலும் பணத்துக்காக பெண் என்ஜினீயரை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதுகுறித்து பெண் என்ஜினீயர் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷாலை தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story