தஞ்சையில் குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர் அதிகாரிகள் கவனிப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தஞ்சையில் குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர் அதிகாரிகள் கவனிப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 7 July 2019 10:30 PM GMT (Updated: 7 July 2019 7:19 PM GMT)

தஞ்சையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்வார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான குடிநீர், கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ராட்சத கிணற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் தஞ்சையை அடுத்த பள்ளியக்கிரஹாரத்தில் உள்ள வெண்ணாற்று நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கு குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, அதனுடன் குளோரின் கலக்கப்படுகிறது. பின்னர் வெண்ணாற்று நீரேற்று நிலையத்தில் இருந்து தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து குடிநீர் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குறையும் நீர்மட்டம்

இது தவிர ஆழ்துளை கிணறுகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தஞ்சை மாநகராட்சி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு மாநகராட்சி குடிநீர் குழாயுடன் இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. தஞ்சை மாநகர மக்களுக்கு தினமும் 28 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தினால் ஆறுகள், குளங்கள், ஏரிகள் எல்லாம் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது. கடும் வறட்சி நிலவி வருவதால் குடிநீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக போடப்பட்டுள்ள குழாய்களில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

வீணாகும் குடிநீர்

பள்ளியக்கிரஹாரத்தில் செம்புகாவேரி பாசன வாய்க்காலின் கரைபகுதியின் வழியாக செல்லக்கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. வாய்க்காலுக்கு அடியில் செல்லக்கூடிய குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. இந்த நீர் எல்லாம் வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. குழாயில் குடிநீர் செல்வது நிறுத்தப்பட்டால் வாய்க்காலில் தேங்கி நிற்கும் நீர் அப்படியே ஓட்டையின் வழியாக மீண்டும் குழாய்க்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த குடிநீர், வேறு பகுதியில் உள்ள மக்களுக்கு செல்லும்போது கலங்கலாக செல்வதுடன், தொற்று நோய் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.

ஆங்காங்கே குடிநீர் பிரச்சினை நிலவி வரும் நிலையில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைவாக சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். அதேபோல் வெண்ணாற்றில் குழாயில் இருந்து குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. அந்த நீரில் பலர் குளித்து வருகின்றனர். இவற்றையும் சரி செய்ய வேண்டும்.

மக்கள் கருத்து

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பல இடங்களில் குடிநீரை விலைக்கு வாங்கி கொண்டு இருக்கின்றனர். பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் பிடித்து வரக்கூடிய நிலையும் சில இடங்களில் உள்ளது. தஞ்சை மாநகரில் குடிநீர் பிரச்சினை பெரிய அளவில் இல்லை என்றாலும் விரிவாக்க பகுதிகளில் லாரிகள் மூலம் தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவக்கல்லூரி, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் எல்லாம் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்குள் மழை பெய்யவில்லை என்றால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றிவிடும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு துளி நீரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே குடிநீர் வீணாக செல்வதை வேடிக்கை பார்க்காமல் அவற்றை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story