அரவக்குறிச்சி அருகே மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி புதுப்பெண் உள்பட 5 பேர் காயம்


அரவக்குறிச்சி அருகே மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி புதுப்பெண் உள்பட 5 பேர் காயம்
x
தினத்தந்தி 8 July 2019 4:30 AM IST (Updated: 8 July 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே டயர் வெடித்ததால் மரத்தில் கார் மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில் புதுமாப்பிள்ளை பலியானார். இதில் புதுப்பெண் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

அரவக்குறிச்சி,

நாமக்கல் மாவட்டம் குப்பாண்ட பாளையத்தை சேர்ந்த தனபால் (வயது 30), இவருடைய மனைவி கீதாஞ்சலி (23). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது. இவர்களது நண்பர்கள் சேலம் மாவட்டம் ஸ்ரீரங்கபாடியை சேர்ந்தவர் தினேஷ்பிரபு (28), கோகுல்நாத் (28), அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, குப்பனூரை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர்கள் 6 பேரும் ஒரு காரில் சேலத்திலிருந்து கேரள மாநிலம் கோவலத்திற்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கு சுற்றி பார்த்து விட்டு 6 பேரும் அதே காரில் சேலத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை தனபால் ஓட்டி வந்தார்.

புதுமாப்பிள்ளை பலி- 5 பேர் காயம்

இந்தநிலையில் நேற்று காலை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஈசநத்தம் பிரிவு பகுதியில் கார் வந்தபோது, காரின் டயர் வெடித்தது. இதனால் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி, சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி புதுமாப்பிள்ளை தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் காயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story