மின்வாரிய விளையாட்டு போட்டிகள் தொடக்கம்: ஆக்கி போட்டியில் திருச்சி, சென்னை அணிகள் அரையிறுதிக்கு தகுதி


மின்வாரிய விளையாட்டு போட்டிகள் தொடக்கம்: ஆக்கி போட்டியில் திருச்சி, சென்னை அணிகள் அரையிறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 7 July 2019 10:45 PM GMT (Updated: 7 July 2019 8:27 PM GMT)

மின்வாரிய மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் தொடங்கியது. ஆக்கி போட்டியில் திருச்சி, சென்னை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

திருச்சி,

தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான ஆண்கள் விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 14-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் திருச்சி, நெல்லை, சென்னை, மதுரை, கோவை உள்பட பல்வேறு மண்டலங்களை சேர்ந்த 500 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

இதில் நேற்று நடந்த ஆக்கி போட்டிகளில் வெற்றி பெற்று கோவை, திருச்சி, சென்னை, நெல்லை ஆகிய 4 மண்டல அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. கால்பந்து போட்டியில் நெல்லை, கோவை, சென்னை, ஈரோடு ஆகிய 4 மண்டல அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதேபோல் கைப்பந்து போட்டியில் நெல்லை, விழுப்புரம், சென்னை, கோவை ஆகிய 4 மண்டல அணிகளும், பூப்பந்து போட்டியில் சென்னை, நெல்லை, கோவை, வேலூர் ஆகிய 4 மண்டல அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முன்னதாக நேற்று காலை நடந்த தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக சென்னை இயக்குனர் சுந்தரவதனம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ரத்தினவேல் எம்.பி., மாவட்ட கலெக்டர் சிவராசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் விழிப்புப்பணி டி.ஜி.பி. தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டிகளை டி.ஜி.பி. தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து பேசுகையில், “விளையாட்டு மனிதனின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருகிறது. விளையாட்டினால் நினைவாற்றல் அதிகரித்தல், தெளிவான முடிவுகளை எடுத்தல், கலைகளை ரசிக்கும் திறன் ஆகியவை ஏற்படுகிறது. விளையாட்டில் வெற்றி பெறும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெற்றி, தோல்விகளை சரிசமமாக பார்க்கும் எண்ணம் வளரும்“ என்றார்.

திருச்சி மண்டல தலைமை பொறியாளர் வளர்மதி வரவேற்றார். விழாவில் போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். வருகிற 13-ந் தேதி ஆண்களுக்கான தடகள போட்டிகளும், 14-ந் தேதி பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.

Next Story