மாடு மீது மோதியதால் என்ஜின் கோளாறு: நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ஷாலிமார் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நின்றது


மாடு மீது மோதியதால் என்ஜின் கோளாறு: நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ஷாலிமார் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நின்றது
x
தினத்தந்தி 8 July 2019 4:15 AM IST (Updated: 8 July 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ஷாலிமார் எக்ஸ்பிரஸ் இரணியல் அருகே மாடு மீது மோதியதால் நடுவழியில் நின்றது. இதன் காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக மேற்கு வங்காள மாநிலம் ஷாலிமாருக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஷாலிமார் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இதே போல நேற்று மதியமும் நாகர்கோவிலில் இருந்து ஷாலிமார் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இந்த ரெயில் பள்ளிவிளை ரெயில் நிலையத்தை கடந்து இரணியல் ரெயில் நிலையம் அருகே சென்ற போது திடீரென ஒரு மாடு குறுக்கே சென்றுள்ளது. இதனால் மாடு மீது ரெயில் மோதியதாக கூறப்படுகிறது.

எனினும் ரெயில் சிறிது தூரம் வரை சென்றது. ஆனால் அதன் பிறகு ரெயிலை இயக்க முடியவில்லை. மாடு மீது மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக ஷாலிமார் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நின்றது.

இதைத் தொடர்ந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி சுமார் ஒரு மணி நேரத்தையும் தாண்டி நடந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் கொல்லத்தில் இருந்து வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூருவில் இருந்து வரும் ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நாகர்கோவிலுக்கு வரவேண்டி இருந்தது. மேலும் நாகர்கோவிலில் இருந்து 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய புனலூர் பயணிகள் ரெயிலையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே கோளாறு ஏற்பட்ட ஷாலிமார் ரெயிலில் மாற்று என்ஜின் பொருத்தி ரெயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே கோளாறு அடைந்த ஷாலிமார் ரெயில் என்ஜினை ஊழியர்கள் சரி செய்து விட்டனர். இதனையடுத்து அந்த ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. பின்னர் மாற்று என்ஜின் மீண்டும் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நடுவழியில் ரெயில் நின்றதால் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறை ரெயில் நிலையத்திலும், ஐலேண்டு எக்ஸ்பிரஸ் இரணியல் ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. ஷாலிமார் ரெயில் சென்ற பிறகு அனந்தபுரி மற்றும் ஐலேண்டு ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அதாவது 4.30 மணிக்கு நாகர்கோவில் வரவேண்டிய ஐலேண்டு எக்ஸ்பிரஸ் 5 மணிக்கு வந்தது. ஆனால் குழித்துறை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மாலை 6.45 மணிக்கு தான் அங்கிருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது.

அதே சமயத்தில் மிகவும் தாமதம் ஏற்பட்டதால் புனலூர் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். நாகர்கோவில், குழித்துறை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ரெயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story