வேளச்சேரியில் ஓட்டல் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது பணத்தகராறில் கொன்றதாக தகவல்


வேளச்சேரியில் ஓட்டல் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது பணத்தகராறில் கொன்றதாக தகவல்
x
தினத்தந்தி 8 July 2019 3:57 AM IST (Updated: 8 July 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

வேளச்சேரியில் ஓட்டல் தொழிலாளி கொலை வழக்கில் தப்பி ஓடிய நண்பர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கோழிப்பண்ணை வைக்க பணம் கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கார்த்திக். இவர், சாலையோரத்தில் வாகனத்தில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவரிடம் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜித்து (வயது 22), அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாந்தோ(23), ரஞ்சித் (24), அலோக்(24) ஆகிய 4 பேர் வேலை பார்த்து வந்தனர்.

நேற்றுமுன்தினம் 4 பேரும் வேலைக்கு வரவில்லை. ரஞ்சித்துக்கு போன் செய்தபோது, தான் அவசரமாக ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் கார்த்திக், 4 பேரும் தங்கி இருந்த வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி 5-வது மெயின் ரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தபோது, ஜித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நண்பர்கள் 4 பேரும் அவரை இரும்பு கம்பியால் அடித்தும், கல்லால் தலையில் தாக்கியும் கொன்று விட்டு தப்பியது தெரிந்தது. இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஒடிய 3 பேரை தேடி வந்தனர்.

கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சுப்புராயன், வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேரும் பெங்களூருக்கு தப்பி செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே தனிப்படை போலீசார், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது அங்கு வந்த ஜாந்தோ, ரஞ்சித், அலோக் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், திரிபுராவில் ஜித்துவின் அண்ணன் மேற்பார்வையில் இவர்கள் 4 பேரும் சேர்ந்து கோழி பண்ணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக மற்ற 3 பேரும் தலா ரூ.70 ஆயிரமும், ஜாந்தோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும் பணம் போட்டு உள்ளனர். எனவே தான் கூடுதலாக கொடுத்த ரூ.40 ஆயிரத்தை திருப்பிக்கேட்டு ஜாந்தோ தகராறு செய்தார். அப்போது ஜித்து மிரட்டியதால் அவரை கொலை செய்தது தெரிந்தது. கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story