சங்கராமநல்லூர் பேரூராட்சியில் குடிநீர் குழாய்களில் வால்வு பொருத்தும் பணி மும்முரம்


சங்கராமநல்லூர் பேரூராட்சியில் குடிநீர் குழாய்களில் வால்வு பொருத்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 8 July 2019 4:32 AM IST (Updated: 8 July 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

சங்கராமநல்லூர் பேரூராட்சியில் குடிநீர் குழாய்களில் வால்வு பொருத்தும் பணி மும்முரமாக நடந்து வருவதாக செயல் அலுவலர் கூறினார்.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அருகே உள்ள சங்கராமநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ருத்ராபாளையத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும், சங்கராமநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் ஏற்கனவே சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் ருத்ராபாளையம் பகுதிக்கு நேற்று சங்கராமநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமி சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக, பேரூராட்சி குடிநீர் பணியாளர்கள் மூலம், தேவையான குடிநீர் சாதனங்களை கொண்டு குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்கராமநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமி கூறியதாவது:-

சங்கராமநல்லூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் குடிநீரை சீராக வழங்கும் வால்வு (புளோ கன்ட்ரோல் வால்வு) பொருத்தும் பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த வால்வு பொருத்தப்பட்டதன் மூலம், குடிநீர் உறிஞ்சும் நிலை தடுக்கப்படும். இதனால் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் சீராக இருக்கும். முதல்கட்டமாக ருத்ராபாளையம் பகுதியில் 11 வீட்டுக்குடிநீர் இணைப்புகளில் வால்வு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் மூன்று குழுக்களாக பிரித்து சங்கராமநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள 1053 குடிநீர் இணைப்புகளுக்கும் வால்வு பொருத்தப்படும். இதனால் கடைக்கோடியில் உள்ள அனைத்து வீட்டுக்குடிநீர் மற்றும் பொதுக்குடிநீர் குழாய்களிலும் தொடர்ந்து 3 மணி நேரம் குடிநீர் வழங்க இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story