புதுவை கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்


புதுவை கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 8 July 2019 4:41 AM IST (Updated: 8 July 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

புதுவை கடற்கரையில் நேற்று மக்கள் கூட்டம் அலை மோதியது.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. நேற்று 100.76 டிகிரி வெயில் பதிவானது. காலை 10 மணி முதலே வீட்டை விட்டு வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். மதிய நேரத்தில் வீடுகளின் உள்ளேயே அமர முடியவில்லை. அந்த அளவிற்கு வெயிலின் வெப்பம் அதிகமாக உள்ளது.

பகல் நேரத்தில் வெளியில் செல்லும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். பெண்கள் துப்பட்டாவால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டும், குடைகளை பிடித்தபடியும் செல்வதை காண முடிகிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரத்தில் வெளியில் செல்லாமல் விடுதி அறைகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.

வெயிலின் தாக்கம் மாலை 4 மணிக்கு மேல்தான் குறையத்தொடங்கியது. அதன் பிறகு வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் கடற்கரை சாலை, பூங்காக்களுக்கு காற்று வாங்க குவிகின்றனர். பழைய துறைமுகம் அருகேயும், தலைமை செயலகம் எதிரே புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை மணல்பரப்பு பகுதிக்கும் சென்று சிலர் கடலில் இறங்கி அலையில் கால்களை நனைத்து விளையாடி மகிழ்ந்தனர். இதனால் கடற்கரையில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

இதே போல் சண்டே மார்க்கெட் நடைபெறும் காந்திவீதியிலும் நேற்று மாலை அதிக அளவில் மக்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர். புதுவை நகர பகுதியில் நேற்று வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களை அதிக அளவில் காணமுடிந்தது. இதனால் அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதனை சரி செய்தனர்.

இதே போல் நோணாங்குப்பத்தில் உள்ள சுண்ணாம்பாறு படகு குழாமில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று படகுசவாரி செய்தனர். படகில் பாரடைஸ் பீச்சுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு கடலில் குளித்து மகிழ்ந்தனர். அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story