காமராஜர் மணி மண்டபம்; 3 முதல்-அமைச்சர்களை கண்டபோதிலும் ஆமை வேகத்தில் பணிகள், திறப்பு விழா காண்பது எப்போது?


காமராஜர் மணி மண்டபம்; 3 முதல்-அமைச்சர்களை கண்டபோதிலும் ஆமை வேகத்தில் பணிகள், திறப்பு விழா காண்பது எப்போது?
x
தினத்தந்தி 8 July 2019 4:45 AM IST (Updated: 8 July 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

3 முதல்-அமைச்சர்களை கண்டபோதிலும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் காமராஜர் மணிமண்டபம் தயாராவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ் அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவேதான் பெருந்தலைவர் காமராஜருக்கு சிறப்பு செய்யும் வகையில் கல்வி நிறுவனங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு வருகிறது. கல்வித்துறை வளாகத்திற்குகூட பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவருக்கு மகுடம் சூட்டும் விதமாக மணிமண்டபம் கட்ட அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதற்காக கருவடிக்குப்பத்தில் 3¾ ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மணிமண்டபம் கட்டுவதற்காக கடந்த 2007-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்த பணிகள் சுமார் ரூ.23 கோடியே 60 லட்சம் மதிப்பில் ஆரம்பிக்கப்பட்டன. இந்த மண்டபத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது எம்.பி.பி.எஸ், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் மாணவர் சேர்க்கையானது காலாப்பட்டு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. அந்த அலுவலகத்தை இங்கே கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஒரே நேரத்தில் 150 மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரும் வகையில் ஆடிட்டோரியம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கின. பணிகள் தொடங்கும் போது வேகமாக நடந்தது. அதன் பின்னர் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. ஆனாலும் இதுவரை காமராஜர் மணிமண்டபம் கட்டும் பணி முடிந்தபாடில்லை.

இதற்கு நிதிப்பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது ஒதுக்கப்படும் நிதியில் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மணிமண்டபம் கட்டும் பணிகள் வைத்திலிங்கம், ரங்கசாமி, நாராயணசாமி என அடுத்தடுத்து 3 முதல்-அமைச்சர்களை கண்டபோதிலும் இன்னமும் நிறைவடையாமலேயே உள்ளது.

பெருமளவு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சிறிய அளவிலான பணிகள் மட்டுமே உள்ளன. எனவே திறப்பு விழா காண்பது எப்போது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதுவை அரசு தற்போது 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தை முடிப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். பணிகளை விரைந்து முடித்து மணிமண்டபத்தை திறந்து காமராஜருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story