புதுவையில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி விரைவில் அமையும் - மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சு


புதுவையில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி விரைவில் அமையும் - மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 8 July 2019 5:00 AM IST (Updated: 8 July 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

2021-ம் ஆண்டு புதுவையில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த தொழிலதிபரும், கல்வியாளருமான விக்டர் விஜயராஜ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை பா.ஜ.க.வில் இணைந்தார். இதற்கான விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு கட்சியின் மாநில தலைவர் சாமி நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் பிரதமர் மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 23 கோடி பேர் வாக்களித்துள்ளனர். கடந்த முறையை விட இது 20 சதவீதம் அதிகம். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மக்களிடம் கூட மாற்று சிந்தனை வந்துள்ளது. நாடு முழுவதும் மக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கின்றனர். நாம் தவறாக மாற்று கட்சிகளுக்கு வாக்களித்து விட்டோமோ என்று வருந்துகின்றனர். புதுவை மாநிலத்தில் ஏராளமான மக்கள் மாற்று கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

மத்தியில் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் தொடர்ந்து கட்சியை நடத்த முடியாது என முடிவு செய்து அவர் பதவி விலகுகிறார். மத்திய அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை புதுவையில் முழுமையாக செயல்படுத்த வேண்டும். அதற்கு வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை பார்த்து மாற்று கட்சியில் இருந்து இளைஞர்கள் பலர் பா.ஜ.க. வில் வந்து இணைகின்றனர்.

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் ஊழல், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. புதுவை மாநிலம் 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. எனவே மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பலர் தாமாக முன்வந்து பா.ஜ.க.வில் இணைகின்றனர். இதே போல் தான் இன்று(நேற்று) தொழிலதிபர் விக்டர் விஜயராஜ் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு 78 சதவீதம் நிதிஉதவி வழங்கி வருகிறது. புதுவை மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் மத்திய அரசு புதுவைக்கும் 78 சதவீதம் நிதி உதவி வழங்கும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் புதுவைக்கு வரும். அவ்வாறு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். எனவே 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story