பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை கடத்த திட்டம் - போலீஸ் அதிகாரி பரபரப்பு தகவல்
‘பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை கடத்த திட்டமிட்டனர்‘ என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பழனி,
அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது. அது சேதமடைந்ததாக கூறி, கடந்த 2004-ம் ஆண்டு 200 கிலோவில் ஐம்பொன்னாலான முருகன் சிலை செய்யப்பட்டு, நவபாஷாண சிலைக்கு முன்பு வைத்து பூஜைகள் நடந்தது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஐம்பொன் சிலை செய்யப்பட்டதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முறைகேடுகள் நடந்தது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில், சிலை செய்த ஸ்தபதி முத்தையா, அப்போதையை கோவில் இணை ஆணையரான கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து உலோகவியல் பேராசிரியர் தலைமையிலான குழுவினர், நவீன கருவிகளை கொண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐம்பொன் சிலையை சோதனை செய்தனர்.
பின்னர் சிலையை தஞ்சை கோர்ட்டில் ஒப்படைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் ஓர் ஆண்டுக்கு பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, அமுதா மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் பழனிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பாலாறு-பொருந்தலாறு இல்லத்தில் வைத்து சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பழனி முருகன் கோவிலில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் செய்யப்பட்ட மூலவர் நவபாஷாண சிலையை மாற்ற தனிநபருக்கும், அரசுக்கும் அதிகாரம் இல்லை. இந்தநிலையில் பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது.
மேலும் தொன்மையான மூலவர் சிலையை அபகரிக்க முயன்றனரா? என்பது குறித்தும் புலன் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை மோசடி வழக்கில் கைதான ஸ்தபதி முத்தையாவே, நவபாஷாண சிலையை கடத்த அடிக்கோலிட்டது தெரியவந்தது.
இந்த ரகசிய திட்டத்தை மறைத்து, சிலையை அபகரிக்க அவரின் பின்னின்று இயக்கியவர்கள் யார், யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பழனியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ஐம்பொன் சிலை மீண்டும் இங்கு கொண்டு வரப்படுமா? என்று பொன்.மாணிக்கவேலிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மூலவர் முக்கியமா?, உற்சவர் முக்கியமா? என சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் இதுதொடர்பான விசாரணை மீண்டும் நடைபெறும். அதற்காக மீண்டும் பழனிக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story