ரெயிலை தவறவிடும் பயணிகள்- சந்தைக்கு வர தயங்கும் பெண்கள், அரசு மதுக்கடைகளால் நெரிசலில் தள்ளாடும் நாகல்நகர்
தமிழகத்தில் அரசு மதுபானக்கடைகளை அனைத்து பகுதிகளிலும் பார்க்கலாம். மாநிலம் முழுவதும் தற்போது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகள் செயல்படுகின்றன.
திண்டுக்கல்,
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது 152 அரசு மதுக்கடைகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் மூடப்பட்ட மதுக்கடைகள் புதிய இடத்தில் திறக்கப்பட்டு விட்டன. மேலும் கிராமங்களில் மதுபான விற்பனை குறைவாக இருக்கும் மதுக்கடைகள், நகர் பகுதியை ஒட்டியும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் மாற்றப்படுகின்றன. அதன்படி திண்டுக்கல் நகரில் அரசு மதுபான கடைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. கிராமங்களில் ஒதுக்குப்புறமாக இருந்த மதுக்கடைகள் திண்டுக்கல் நகரில் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் நகரில் 11 ஆக இருந்த அரசு மதுபானக்கடைகள் எண்ணிக்கை தற்போது 19 ஆக உயர்ந்து விட்டது. அது மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது.
அதிலும் பெருந்தலைவர் காமராஜரின் பெயரை கொண்டுள்ள திண்டுக்கல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சந்தை அமைந்துள்ள நாகல்நகர் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அரசு மதுபானக்கடைகள் அதிகமாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலம் அருகே கடந்த மாதம் புதிதாக ஒரு மதுக்கடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மக்கள் கூடும் இடங்களில் மதுக்கடைகளை திறப்பதால் திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையம், நாகல்நகர் சந்தை, ரெயில் நிலையத்தில் குடிபோதையில் நடமாடும் நபர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் மட்டுமின்றி சில நேரம் பெண்களும் போதையில் சாலையோரத்தில் விழுந்து கிடப்பதை நினைத்து சக மதுப்பிரியர்களே சங்கடப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. மதுப்பிரியர்களின் வாகனங்கள் இதில் குறிப்பாக நாகல்நகர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபக்கங்களிலும் இணைப்பு சாலை உள்ளது. இதில் வடக்கு பகுதியில் உள்ள சாலையில் ஒரு மதுக்கடையும், தெற்கு பகுதியில் உள்ள சாலையில் 2 மதுக்கடைகளும் உள்ளன. வடக்கு சாலையின் வழியாக தான் ரெயில் நிலையத்துக்கு மக்கள் செல்கின்றனர். இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மதுக்கடைக்கு மதுகுடிக்க வருபவர்கள், கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களை சாலையிலேயே நிறுத்துகின்றனர். ஒருசிலர் சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு, அதற்குள் அமர்ந்தே மது குடிக்கின்றனர். மேலும் மதுக்கடையில் பார் வசதி இருந்தும், சிலர் மதுவுடன் வெளியே வந்து சாக்கடை கால்வாய்க்கு அருகே அமர்ந்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதனால் நாகல்நகர் மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தை மதுப்பிரியர்களின் வாகனங்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன. அதிலும் மதுக்கடை திறக்கப்படும் நேரமான மதியத்தில் இருந்து இரவு வரை வாகனங்களின் அணிவகுப்பு அதிகமாக உள்ளது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வரும் வாகனங்கள், அரசு பணிமனைக்கு வரும் பஸ்கள் செல்ல முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக உரிய நேரத்தில் செல்ல முடியாமல் ரெயிலை தவற விட்டவர்கள் உண்டு. மேலும் சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. அந்த அளவுக்கு நாகல்நகரில் நெரிசில் சிக்கி தள்ளாடுகிறது. இதுதவிர போதை ஆசாமிகளின் தொல்லையால் நாகல்புதூர், திருமலைசாமிபுரம் பகுதிகளை சேர்ந்த பெண்கள் நாகல்நகர் சந்தைக்கு வருவதற்கே பயப்படும் சூழல் உள்ளது. இரவு நேரத்தில் போதை ஆசாமிகள் தெருக்களில் சுற்றித்திரிவதால் சமூக விரோத செயல்களுக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் இருக்கும் அந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோல் ரெயில்வே மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் 2 மதுக்கடைகள் அருகருகே உள்ளன. இதில் ஒன்று கடந்த மாதம் திறக்கப்பட்டது ஆகும். அங்கும் போதை ஆசாமிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. நாகல்நகர் சந்தைக்கு மக்கள் நிம்மதியாக சென்று வரமுடியவில்லை. மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை ரோட்டில் தற்போது போதை ஆசாமிகளின் தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் சந்தைரோட்டில் உள்ள கூட்டத்தை விட, மதுக்கடையில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது. மாவட்டத்தில் பல ஊர்களிலும் இதே நிலை இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஊரின் நடுவே மதுக்கடைகள் அமைந்துள்ளன. இதனால் மக்கள் நிம்மதியாக நடமாட முடியாத நிலை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத மற்றும் ஒதுக்குப்புறமான பகுதிகளில் மதுக்கடையை திறந்தால் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். மது பழக்கம் இல்லாதவர்களும் நிம்மதியாக இருக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
Related Tags :
Next Story