மரக்காணம் அருகே மீனவர் கிராமத்தில், இருதரப்பினர் மோதல்; வீடுகள் சூறை, பதற்றம் - போலீஸ் குவிப்பு
மரக்காணம் அருகே மீனவர் கிராமத்தில் இரு தரப்பினர் மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டது.
மரக்காணம்,
மரக்காணம் அருகே கைப்பானிகுப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. முன்னாள் மீனவர் பஞ்சாயத்து தலைவர். தற்போது மீனவர் பஞ்சாயத்து தலைவராக மனோகரன் இருந்து வருகிறார். இறால் குஞ்சு பொரிப்பக தொழிற்சாலை நிலத்தை விற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் நிர்வாகிகள் மீது தற்போதுள்ள நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இரு தரப்பினரையும் சமாதானம் செய்துவைக்க விழுப்புரம், கடலூர் மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் ஒன்று கூடி மரக்காணம் அருகே உள்ள அனிச்சங்குப்பத்தில் சமாதானம் பேசினர். இதில் ஏழுமலை, மனோகரன் தரப்பினர் பகையை மறந்து சமாதானமாக செல்லுமாறு அறிவுரை கூறப்பட்டது.
இதை ஏற்று இரு தரப்பினரும் ஊருக்கு சென்றனர். அங்கு அவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் தற்போது செயல்பட்டு வரும் பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர், நிர்வாகிகளை சரமாரியாக தாக்கியதோடு, அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து ஏ.சி., வாஷிங்மெஷின், இருசக்கர வாகனங்கள், பைபர் படகு என்ஜின் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கினர்.
இந்த தாக்குதலில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை மற்றும் முன்னாள் நிர்வாகிகள் முத்துக்குமரன், சங்கர், பழனி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தாக்குதல் தொடர்பாக தற்போதைய மீனவர் பஞ்சாயத்து தலைவர் மனோகர், அவரது ஆதரவாளர்கள் சத்யன், சீனுவாசன், வேலு, ராஜசேகர், கஜேந்திரன், ஞானசேகரன், ராஜி, கபிலன், பாஸ்கரன் ஆகிய 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று, மோதல் தொடர்பாக கைப்பானிக்குப்பம் கிராமத்தில் விசாரணை நடத்தினார். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் மேற்கொண்டு அசம்பாவிதம் சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story