உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - ஊட்டியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - ஊட்டியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2019 4:00 AM IST (Updated: 8 July 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று ஊட்டியில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார்.

ஊட்டி,

தமிழ்நாடு இறகுப்பந்து சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான இறகுப்பந்து போட்டி ஊட்டியில் உள்ள அண்ணா உள்விளையாட்டு அரங்கில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாடினர். 35 வயது முதல் 75 வயது வரை 8 பிரிவுகளில் விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு இறகுப்பந்து சங்க தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு ஆண் ஒற்றையர், பெண் ஒற்றையர், ஆண் இரட்டையர், பெண் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு கோப்பைகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாடுகளை சேர்ந்த பயிற்சியாளர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி பெறும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் மட்டுமல்லாமல், தாலுகா அளவில் உள்விளையாட்டு அரங்குகளை அரசு ஏற்படுத்த வேண்டும். தென்மேற்கு பருவமழை பெய்யும்போது, நீரை பாதுகாத்து சேமிக்க வேண்டும்.

அதிக அளவில் நிதி ஒதுக்கி ஆறு, குளங்களை தூர்வார வேண்டும். ஆற்றில் எடுக்கப்படும் மணலை முற்றிலும் நிறுத்த வேண்டும். அ.தி.மு.க. அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவிரி பிரச்சினை தொடர்பாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு 9 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தும், தண்ணீர் இல்லை என்று கூறி கர்நாடக அரசு வழங்கவில்லை. மேகதாது அணை கட்டினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும். மேகதாது அணை கட்டப்பட்டால், 175 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகாவில் தேக்கப்படும். தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.

கடலில் வீணாகும் தண்ணீரை தடுக்க ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்ட வேண்டும். கோதாவரி-காவிரியை இணைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது. அந்தந்த மாநிலத்துக்கு மாநில கல்வி உரிமை அளிக்க வேண்டும். எந்த மொழியையும் திணிக்கக்கூடாது.

அந்தந்த மாநிலங்களில் உள்ள மொழி, பண்பாடு, கலாசாரம், நாகரிகத்தை கடைபிடிப்பதை மத்திய அரசு மதிக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்பினார்கள். நாங்கள் சொன்ன உண்மையை நம்பவில்லை. தற்போது மக்கள் ஏமாந்து விட்டோம் என்று கூறுகின்றனர். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

எட்டு வழிச்சாலையை எதிர்ப்போம். மத்திய அரசின் பட்ஜெட்டில் சில வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மேலும் மறைமுகமாக வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன. கல்வி, வேளாண்மை, சுகாதாரத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து இருக்கலாம்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு மாநிலங்களவையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பா.ம.க. உயர்நிலை குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி நான் போட்டியிட உள்ளேன். நாளை (இன்று) வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறேன். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழ்நாடு இறகுப்பந்து சங்க பொதுச்செயலாளர் அருணாச்சலம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story