மருத்துவ படிப்புக்கான பட்டியலில் இடம்பெறாததால் காமராஜர் இல்லத்தில் சான்றிதழ்களை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி மாணவர்; அரசு உதவ வேண்டும் என கோரிக்கை


மருத்துவ படிப்புக்கான பட்டியலில் இடம்பெறாததால் காமராஜர் இல்லத்தில் சான்றிதழ்களை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி மாணவர்; அரசு உதவ வேண்டும் என கோரிக்கை
x
தினத்தந்தி 8 July 2019 5:50 AM IST (Updated: 8 July 2019 5:50 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்புக்கான பட்டியலில் பெயர் இடம்பெறாததால் மாற்றுத்திறனாளி மாணவர் தனது படிப்பு சான்றிதழ்களை விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தில் ஒப்படைக்க வந்தார். இந்த விவகாரத்தில் அரசு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

விருதுநகர்,

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 27). மாற்றுத்திறனாளியான அவர் கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை எழுதினார். இதில் அவர் 140 மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், மருத்துவ படிப்புக்கு தகுதியானவர் என சென்னை மருத்துவக்குழு முன்பு தகுதி சான்றிதழ் பெற்றுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அவரை விட நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்த மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெயர் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அருண்குமார், மதுரை ஐகோர்ட்டில் தனக்கு மருத்துவ படிப்புக்கு இடம் வழங்க உத்தரவிடுமாறு மனுதாக்கல் செய்திருந்தார். அப்போது ஐகோர்ட்டு, அவரை மீண்டும் சென்னை மருத்துவக்குழு முன்பு ஆஜராகி தகுதிச் சான்றிதழை பெற உத்தரவிட்டது. அதன்படி அவர் மீண்டும் சென்னை மருத்துவக்குழு முன்பு ஆஜரானார். ஆனால் அதற்குரிய சான்றிதழ் அவரிடம் வழங்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து மதுரையில் உள்ள மருத்துவக்குழு முன்பு ஆஜராகி தகுதிச் சான்றிதழ் பெற அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மதுரை மருத்துவக்குழுவினரும் அவருக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதற்கிடையே நடப்பு கல்வி ஆண்டிற்கான மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மாணவர் அருண்குமார், தனது கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் காமராஜர் நினைவு இல்லத்தில் ஒப்படைத்துவிட்டு, வேறு வேலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்து விருதுநகர் வந்தார். பின்னர் காமராஜர் இல்லத்தில் சான்றிதழ் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த முயன்ற அவரை, போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். மாணவர் அருண்குமாருக்கு அறிவுரை வழங்கி, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கூறினர்.

இதுதொடர்பாக அருண்குமார் கூறும்போது, ‘‘மருத்துவ படிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 120 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த கல்வி ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் 20 பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். மீதி இடங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டிலும் 52 மாணவர்கள் மட்டுமே தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அந்த பட்டியலில் இடம்பெற எனக்கு உரிமை இருந்தும், எனது பெயர் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெறவில்லை. மீண்டும் சட்டரீதியாக போராட என்னிடம் வசதியும் இல்லை. எனவே இந்த வி‌ஷயத்தில் அரசுதான் எனக்கு உதவ வேண்டும்’’ என்றார்.


Next Story