பழனியில் துணிகரம், அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 80 பவுன்-ரூ.4 லட்சம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பழனியில் துணிகரம், அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 80 பவுன்-ரூ.4 லட்சம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 July 2019 10:30 PM GMT (Updated: 8 July 2019 5:48 PM GMT)

பழனியில், ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பழனி,

பழனியை அடுத்துள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சம்பத் (வயது 60). அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஈஸ்வரி (56). இவர்களுடைய மகன் திருமணமாகி பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இதனால் சம்பத் தனது மனைவியுடன் பழனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு தனது மனைவியுடன் சம்பத் சென்றார்.

நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சம்பத் உள்ளே சென்று பார்த்தார். அங்குள்ள ஒரு அறையில் துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து பீரோவை பார்த்தபோது, அதில் வைத்திருந்த 80 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் ஆகியவை மாயமாகி இருந்தது. பின்னர் இந்த திருட்டு குறித்து பழனி டவுன் போலீசுக்கு சம்பத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் திருட்டு நடத்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 80 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் திருடர்களை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்து, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் இந்த திருட்டு சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story