அடுத்த மாதம் இறுதியில் நடக்கிறது: தூத்துக்குடியில் புத்தக திருவிழா கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


அடுத்த மாதம் இறுதியில் நடக்கிறது: தூத்துக்குடியில் புத்தக திருவிழா கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 9 July 2019 3:00 AM IST (Updated: 8 July 2019 11:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் புத்தக திருவிழா நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முழுமையாக மாற்றுத்திறனாளிகள் நடத்தும் உணவகம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 3 மாதமாக கேட்டரிங் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 தனியார் நிறுவனங்கள் மூலம் ரூ.30 லட்சம் செலவில் இந்த உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பலர் வேலை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், சுயதொழில் செய்யலாம் என்ற நோக்கத்தில் இந்த உணவகம் தொடங்கப்பட்டு உள்ளது. 15 மாற்றுத்திறனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் பிரமாண்டமான புத்தக திருவிழா நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடியில் தற்காலிக பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 90 சதவீதம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மீதம் உள்ள 10 சதவீதம் பஞ்சாயத்துகளில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் 300 கனஅடி தண்ணீர் வந்தால் 23 கூட்டு குடிநீர் திட்டத்திலும் முழுமையாக தண்ணீர் வினியோகிக்க முடியும். தற்போதும் போதுமான அளவுக்கு தண்ணீர் உள்ளது.

238 குடியிருப்புகளுக்கான குடிநீர் வினியோக திட்டம் மற்றும் 90 குடியிருப்புகளுக்கான குடிநீர் வினியோக திட்டம் ஆகிய 2 திட்டங்கள் மூலம் தூத்துக்குடி, கருங்குளம், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 6 ஒன்றியங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. மாவட்டத்தில் 6 ஒன்றியங்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதியாக அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் ரூ.20 கோடி செலவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், குடிநீர் தொட்டிகள் அமைத்தல், குழாய் பதித்தல், கிணறுகள் தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும், ஒட்டுமொத்தமாக குடிநீர் தட்டுப்பாடு இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 10-ந் தேதிக்குள் (நாளை) 37 பணிகளும் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

முன்னதாக, அவர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் உணவகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். 

Next Story