நெல்லையில் தொழில் நெறி விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கிவைத்தார்


நெல்லையில் தொழில் நெறி விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 8 July 2019 9:30 PM GMT (Updated: 8 July 2019 6:19 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொழில் நெறி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதை கலெக்டர் ஷில்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நெல்லை,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் நேற்று முதல் வருகிற 15-ம் தேதி வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு வாரமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நெல்லை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியன மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது. தொடக்க நிகழ்ச்சியாக தொழில்நெறி விழிப்புணர்வு பற்றிய பேரணி நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஷில்பா கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்திற்கான சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை (அதாவது இன்று) மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம் பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. மேலும் ஆதரவற்ற விதவை, மகளிர் மற்றும் முன்னுரிமை பிரிவினருக்கு திறன் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. மேலும் அதே தினத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 11-ந் தேதி பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதலுக்கான பயிற்சியும் நடக்கிறது. 12-ம் தேதி தொழிற் பயிற்சி நிலையங்களில் திறன் பயிற்சிகள் வழங்குவது மற்றும் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பேட்டை ஐ.டி.ஐ.யில் நடக்கிறது.

இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மூலமாக எலக்ட்ரீசியன், ஆட்டோ மொபைல், செல்போன் பழுது நீக்கும் பயிற்சி, உணவு பதனிடுதல், தையல் பயிற்சி, மருந்தக உதவியாளர் பயிற்சி, ஆடை வடிவமைத்தல், அழகு கலை பயிற்சி, மற்றும் வங்கி நிதி சேவைகள் தொடர்பான பயிற்சி போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், வேலை வாய்ப்பு அலுவலர் மரியசகாய அந்தோணி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் மார்த்தாண்ட பூபதி, செய்யது முகமது, மாவட்ட திறன் பயிற்சி மைய உதவி இயக்குனர் ராஜூ மற்றும் ஐ.டி.ஐ. மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி எம்.ஜி.ஆர். சிலை வழியாக மாவட்ட அறிவியல் மையம், முதன்மை கல்வி அலுவலகம் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது.

Next Story