தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 July 2019 4:30 AM IST (Updated: 9 July 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

சுடுகாட்டிற்கு பாதை வசதி செய்து தராததால் ஆத்திரம் அடைந்த விவசாயி, தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மனு கொடுக்க வரும் பொதுமக்களில் சிலர், மண்எண்ணெய், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களுடன் வந்து அதிகாரிகள் முன்னிலையில் தன் மீது ஊற்றி கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

இதனால் தண்ணீர் பாட்டில்களை கூட்ட அறைக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது. தீயணைப்பு வீரர்களும் கூட்ட அறை முன்பு தயார் நிலையில் நிறுத்தப்படுவது வழக்கம். இப்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தாலும் ஒரு சிலர், மண்எண்ணெய், பெட்ரோல் பாட்டில்களுடன் வருகின்றனர்.

நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே கூட்ட அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூரை சேர்ந்தவர் முனுசாமி(வயது75). விவசாயி. இவர் நேற்று பச்சை துண்டை தோளில் போட்டுக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கையில் பை எதுவும் கொண்டு வராததால் அவரை போலீசார் கூட்ட அறைக்குள் அனுமதித்தனர்.

அவர் கலெக்டர் முன்பு வந்தபோது திடீரென தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்து பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைப்பார்த்த அங்கிருந்த போலீசார் ஓடி வந்து அவரிடம் இருந்த பாட்டிலை பிடுங்கி, விவசாயியை அழைத்துச்சென்று தனி அறையில் அமர வைத்தனர். பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக முனுசாமி கூறும்போது, எங்கள் பகுதியில் சுடுகாட்டிற்கு பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என்பதற்காக தீக்குளிக்க முயற்சி செய்தேன் என்றார்.

போலீஸ் தரப்பில் கூறும்போது, இவர் வேறொரு சமூகத்தை சேர்ந்தவர். மற்றொரு சமூகத்திற்குரிய சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்கிறார். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான வயலின் வழியாக எந்தபிரச்சினையும் இல்லாமல் சுடுகாட்டிற்கு சென்று வருகின்றனர். ஆனால் இவர் பட்டா வழங்கி நிரந்தரமாக பாதை வசதி வேண்டும் என்று கூறுகிறார். இவருக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. அதனால் அவர் பொதுவான கோரிக்கையை முன்வைத்து வருவதாக தெரிகிறது என்றனர்.

போலீசார் பலத்த சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையிலும் விவசாயி மண்எண்ணெய்யை கொண்டு சென்று தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story