கிருஷ்ணகிரியில் தொழில்நெறி விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரியில் தொழில் நெறி விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கிருஷ்ணகிரியில் தொழில்நெறி விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரே தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
இன்றைய இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் விதமாக, பல்வேறு திறன் பயிற்சிகளின் தேவை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன்வார விழா இன்று(நேற்று) முதல் வருகிற 12-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
அதன்படி விழிப்புணர்வு ஊர்வலமும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னுரிமை பிரிவை சேர்ந்தோருக்கு மத்திய, மாநில, உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகளும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும்.
தொடர்ந்து நாளை (புதன்கிழமை) பெண்களுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. 11-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ. மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திறன் பயிற்சி தொடர்பான வினாடி-வினா, வாசகம் எழுதுதல், படம் வரைதல், கட்டுரை எழுதுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். 12-ந் தேதி ஓசூர் அரசு ஐ.டி.ஐ. மாணவர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்படுகிறது.
மேலும் தொழில்பயிற்சி நிலையங்களில் பயின்று தொழில் முனைவோராக உள்ளோர், சிறந்த தொழில் அதிபர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித்தேர்விற்கு பயிற்சி பெற்று தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளில் பணிபுரிவோர், பெரிய நிறுவனங்களில் அதிகாரிகளாக உள்ளோர் ஆகியோருடன் பொதுமக்கள் மற்றும் தொழில்பயிற்சி நிலைய மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
திறன் பயிற்சி பெற விரும்புபவர்கள் www.tnsk-i-ll.tn.gov.in என்ற இணையதளத்தில் திறன் பயிற்சி பற்றிய விவரங்களை தெரிந்துகொண்டு அந்த இணையதளத்திலேயே திறன் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்து பயனடையலாம். மேலும் www.tnv-e-l-a-iv-a-a-i-ppu.gov.in இணையதளத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், போட்டித்தேர்வு குறித்த வினாவங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் தொழில்நெறி குறித்த தகவலை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story